அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!
நீடிக்கும் தலைவலி, வாந்தி, பார்வை மங்கல்… மருத்துவர் எச்சரிக்கும் முக்கிய அறிகுறிகள்
தலைவலி என்பது பெரும்பாலான மக்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சினையாகும். மனஅழுத்தம், தூக்கமின்மை, கண் சோர்வு, நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். ஆனால் சில நேரங்களில் தொடர்ந்து நீடிக்கும் அல்லது வழக்கத்திற்கு மாறான தலைவலி, மூளைக்கட்டியின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாக இருக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மூளைக்கட்டி என்பது மூளையில் அல்லது அதைச் சுற்றியுள்ள திசுக்களில் உருவாகும் அசாதாரண செல்கள் வளர்ச்சியாகும். எல்லா மூளைக்கட்டிகளும் புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவை மூளையின் செயல்பாடுகளை பாதிக்கும் அளவுக்கு வளர்ந்தால் தீவிர உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்த முடியும். இதன் காரணமாக ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, அதிகாலையில் எழுந்தவுடன் ஏற்படும் கடுமையான தலைவலி முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றாகும். குறிப்பாக நாட்கள் செல்லச் செல்ல தலைவலி அதிகரித்து வந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சாதாரண வலி நிவாரணி மருந்துகளால் குறையாத தலைவலியும் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறியாகும்.
தொடர்ச்சியான வாந்தி அல்லது குமட்டல் உணர்வும் மூளைக்கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக வயிற்று பிரச்சினைகள் இல்லாமல் அடிக்கடி வாந்தி ஏற்பட்டால் அது மூளையில் அழுத்தம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பார்வை தொடர்பான மாற்றங்களும் கவனிக்கப்பட வேண்டியவை. மங்கலான பார்வை, இரட்டை பார்வை, பார்வை பரப்பு குறைதல் அல்லது திடீர் பார்வை சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். மூளையின் பார்வை மையங்களை கட்டி பாதிக்கும் போது இத்தகைய பிரச்சினைகள் ஏற்படலாம்.
அதேபோல் உடலின் ஒரு பகுதியில் பலவீனம், கைகள் அல்லது கால்களில் உணர்வு குறைதல், சமநிலை இழப்பு மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளும் மூளைக்கட்டியுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும். சிலருக்கு திடீரென வலிப்பு நோய் போன்ற Fits ஏற்படுவதும் முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக கருதப்படுகிறது.
நினைவாற்றல் குறைபாடு, பேசுவதில் சிரமம், குணநலனில் திடீர் மாற்றம், குழப்பம் மற்றும் கவனக்குறைவு போன்ற மனநிலை மாற்றங்களும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டி உருவாகும்போது தோன்றக்கூடும். இந்த அறிகுறிகள் மெதுவாக வளர்வதால் பலர் ஆரம்பத்தில் அவற்றை அலட்சியம் செய்கின்றனர்.
மூளைக்கட்டியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் சிகிச்சை வெற்றிகரமாக அமையும் வாய்ப்பு அதிகம். MRI மற்றும் CT Scan போன்ற நவீன பரிசோதனைகள் மூலம் கட்டியின் இருப்பிடமும் அளவும் துல்லியமாக கண்டறியப்படுகின்றன. அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மருந்து சிகிச்சைகள் மூலம் பல வகையான மூளைக்கட்டிகளுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான தலைவலி அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று நீடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
