Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் பாஜகவுடன் கூட்டா? கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் – இந்தியா கூட்டணியில் சலசலப்பு

கேரளாவில் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, அந்த மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு தலைவர்களுக்கும், பாஜகவுக்கும் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி பொதுச்செயலர் எம்.ஏ.பேபி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், கேரள சட்டமன்ற தேர்தலின்போது இடதுசாரிகளும், பா.ஜ.க.வும் அரசியல் ரீதியில் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பது போலவும், பிரதமர் மோடியுடன் அப்போதைய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நெருங்கிய நட்புறவு வைத்திருப்பது போலவும் காங்கிரஸ் திட்டமிட்டு பிரசாரம் செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பாஜகவை அரசியல் ரீதியில் எதிர்க்கவே தேசிய அளவில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அதன்படி தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், காங்கிரசும் கூட்டணியாக இருக்கையில், கேரளாவில் பாஜகவுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கூட்டணி வைத்திருப்பதாக காங்கிரஸ் பொய்க் குற்றச்சாட்டு தெரிவித்திருத்துள்ளது. இந்த விவகாரம், எதிர்க்கட்சிக் கூட்டணியில் தாக்கங்களை ஏற்படுத்தும். ஆதலால் இதுகுறித்து வருகிற திங்கள்கிழமை இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் முன்பு காங்கிரஸ் தலைமை தெளிவுப்படுத்த வேண்டும் என்று எம்.ஏ. பேபி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் நாளை (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசை எதிர்கொள்ள பொது வியூகம் அமைப்பது, ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகள் செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை (யுபிடி) உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!