தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் யுவராஜா அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தன்னை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தின் விவரம்: ‘கடந்த 25 ஆண்டுகளாக நான் என் உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து பயணித்த அரசியலிலிருந்து விலகுவதற்கான முடிவை இன்று எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனது அரசியல் வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் ஆரம்ப கட்டத்திலிருந்தே எனக்கு ஒரு நல்ல தலைவராகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தவர் நீங்கள். எனது அனைத்து இன்ப, துன்ப நிகழ்வுகளிலும் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தது உங்கள் அன்பும் ஆதரவும் தான்.
ஒரு சாதாரண தொண்டனாக இருந்த என்னை மக்கள் மத்தியில் யுவராஜா என்று அடையாளப்படுத்திய பெருமை முழுவதும் உங்களையே சாரும். இன்று அரசியல் களத்தில் நான் அறியப்படுகிறேன் என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தது உங்கள் நம்பிக்கையும், ஊக்கமும், வழிகாட்டுதலும்தான். நீங்கள் எனக்கு அளித்த அந்த அடையாளம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும்.
தொடர்ந்து இரண்டு முறை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு அளித்ததற்கும், தமிழ் மாநில காங்கிரஸில் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்று செயல்பட வாய்ப்பு வழங்கியதற்கும், அதன் பிறகு மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி கட்சியின் வளர்ச்சிக்காக பங்களிக்க வாய்ப்பளித்ததற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மக்கள் சேவையில் என்னை ஈடுபடுத்தும் வகையில் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிடும் வாய்ப்பை வழங்கி, என் மீது வைத்த நம்பிக்கை வைத்த உங்களுக்கும், என்னை ஆதரித்த அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
