தமிழகம் முழுவதும் உள்ள 44 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் புரோக்கர்கள் மூலம் முறைகேடாகப் பணம் கைமாறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த மெகா சோதனை அரங்கேறி வருகிறது.
பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான ஓட்டுநர் உரிமம் (Driving License), புதிய வாகனப் பதிவு (Vehicle Registration), எஃப்.சி (FC) எனப்படும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சேவைகளைப் பெற வரும் பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் மூலமாகப் பெரும் தொக லஞ்சமாகப் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தொடர்ந்து ரகசியத் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்பட்ட புகார்களின் தீவிரத்தை அடுத்து இந்த ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கை திட்டமிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகத்தின் உத்தரவின் பேரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 44 முக்கிய ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனிப்படை அதிகாரிகள் இன்று மாலை திடீர் சோதனையைத் தொடங்கினர். சென்னை தாம்பரம், அரியலூர், கும்பகோணம், காரைக்குடி, பழனி, ஆலங்குடி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் அதன் எல்லைக்குட்பட்ட பகுதி அலுவலகங்களில் இந்தச் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சோதனை தொடங்கியவுடன் அலுவலகங்களின் கதவுகள் மூடப்பட்டு, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மொபைல் போன்கள் தற்காலிகமாகப் பெறப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கணக்கில் வராத ரொக்கப் பணம் ஏதேனும் அலுவலகத்திலோ அல்லது அங்கு நின்றிருந்த இடைத்தரகர்களிடமோ உள்ளதா என்பதை அறிய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
