மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் ஷில் டைய்ஹர் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த சைபல் சயது (31) என்பவரிடம் அகமது ஹம்சி (25) என்பவர் வேலை செய்து வந்தார். சரிவர வேலை செய்யாததால் அவரை ஓட்டல் உரிமையாளர் வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அகமது ஹம்சி, கடந்த ஆண்டு ஜனவரி 21 அன்று தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் சைபல் சயதுவை ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரைத் தானே போலீசார் ஏற்கனவே கைது செய்த நிலையில், முக்கியக் குற்றவாளியான அகமது ஹம்சி ஓராண்டாகத் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், அவர் தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் சென்னை விரைந்த மராட்டிய போலீசார், பதுங்கியிருந்த அகமது ஹம்சியை இன்று அதிரடியாகக் கைது செய்து மராட்டியத்திற்கு அழைத்துச் சென்றனர். இக்கைதின் மூலம் இக்கொலை வழக்கின் அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
