திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம் இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு 10 மணி அளவில் கோவிலை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இதையடுத்து
இன்று காலை கோவிலில் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு அம்மன் சன்னதி முன்பு இருந்த அன்னதானம் மற்றும் பொது நிதி 2 உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டு இருந்தது மேலும் பணம் மற்றும் சில்லறை காசுகள் சிதறி கிடந்தன.
பின்னர் உடனடியாக கோவில் நிர்வாகிகள் மற்றும் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு உண்டியலை சுற்றி சோதனை நடத்தப்பட்டது. மேலும் மோப்பநாய் கோயில் வளாகம் முழுவதும் சுற்றி திரிந்தது.இதற்கிடையில் தில்லைநகர் போலீசார் கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் கோவில் நடை எப்பொழுது சாத்தப்பட்டு கோவில் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாராவது மீது சந்தேகம் உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தினார்கள். பிறகு கோவில் வளாகம் முழுவதும் உள்ள சிசிடி கேமரா பதிவு காட்சியை சோதனை செய்து பார்த்தனர். அதில் சில மர்ம ஆசாமிகள் கோவிலில் வந்து செல்வது போல் காட்சி இருந்ததை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. இதற்கிடையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கோவிலை சுற்றி உள்ள சுற்றுச்சுவரின் பின் பகுதியில் இருந்து மர்ம
ஆசாமிகள் ஏறி குதித்து கோவிலுக்குள் நுழைந்து உண்டியல் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.உடைக்கப்பட்ட உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் உண்டியல் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
