தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அதேபோல் கரூர் மாவட்டத்திலும் இன்று காலை முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளியணை அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் வீடுகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாததால், வீடுகளைச் சுற்றியும் சாலைகளிலும் நீர் தேங்கியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மழைக்காலங்களில் இதே நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
