Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

WhatsApp தலைவராக குனால் ஷா! CRED-ல் Meta முதலீடு

WhatsApp தலைவராகும் குனால் ஷா… இந்திய ஸ்டார்ட்அப்புக்கு உலக அரங்கில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் CRED நிறுவனத்தில் Meta நிறுவனம் சுமார் 900 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹7,700 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் CRED நிறுவனத்தின் மதிப்பு 4.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த அறிவிப்பு, இந்திய ஸ்டார்ட்அப் சூழலுக்கே ஒரு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த முதலீட்டை விட அதிக கவனத்தை ஈர்த்துள்ளது மற்றொரு முக்கிய அறிவிப்பு. CRED நிறுவனத்தின் நிறுவனர் குனால் ஷா, உலகின் மிகப்பெரிய மெசேஜிங் தளமான WhatsApp-இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக WhatsApp-ஐ வழிநடத்திய வில் கத்த்கார்ட் புதிய பொறுப்புக்கு மாற உள்ள நிலையில், குனால் ஷா அந்த இடத்தை நிரப்புகிறார்.

2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட CRED, நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது மாதந்தோறும் சுமார் 17 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் கிரெடிட் கார்டு பில் கட்டணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாளுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன், காப்பீடு, முதலீடு மற்றும் நிதி மேலாண்மை போன்ற பல சேவைகளையும் வழங்கி வருகிறது.

Meta நிறுவனத்தின் இந்த முதலீடு வெறும் நிதி முதலீடாக மட்டுமல்லாமல், இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் Meta அதிக நம்பிக்கை வைத்திருப்பதையும் காட்டுகிறது. WhatsApp இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பணப்பரிவர்த்தனை மற்றும் நிதிச் சேவைகள் துறையில் WhatsApp மேலும் விரிவடையலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர் உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு தளங்களில் ஒன்றை வழிநடத்தும் நிலைக்கு உயர்ந்திருப்பது, இந்திய தொழில்நுட்ப உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. குனால் ஷாவின் இந்த புதிய பொறுப்பு, இந்திய தொழில்முனைவோருக்கு புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.

error: Content is protected !!