உலக குருதி கொடையாளர் தினம்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இரத்த தான விழிப்புணர்வு பேரணி.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் பாரதி மோகன் தலைமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,

மாணவிகள், தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, இரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் பேரணியில் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய பேரணி, காந்திகிராமம் வழியாக திருச்சி சாலையில் சென்று மீண்டும் மருத்துவக் கல்லூரி வளாகத்தை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் உயிர்களை காப்பாற்றும் உயரிய செயல் என்பதையும், தன்னார்வ இரத்த தானத்தை பொதுமக்கள் அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
