Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

தென்காசி அருகே கார் மரத்தில் மோதி பேரன், பேத்தியுடன் தாத்தா பலி

தென்காசி அருகே சிவகிரியில் நள்ளிரவில் கார் மரத்தில் மோதி வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பேரன், பேத்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தனர்.

ராணுவவீரர் உள்பட இருவர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சேத்தூர் கருப்பண்ண தேவர் தெருவைச் சேர்ந்த சுந்தரத்தின் மகன் வேலுச்சாமி (51). இவர் அப்பகுதியில் பானிபூரி கடை ஒன்றை நடத்தி வந்தார். இவரது மகள் பிரியதர்ஷினியின் பிறந்த நாளை நேற்று (23ம் தேதி) வீட்டில் விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்.

இதையொட்டி நேற்று முன்தினம் (22ம் தேதி) திங்கட்கிழமை நள்ளிரவில் சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து வருவதற்காக வேலுச்சாமி தனது வீட்டில் இருந்து அருகேயுள்ள சிவகிரி நோக்கி தனது காரில் புறப்பட்டார்.

அவருடன் அதே காரில் அவரது பேத்தி கீர்த்தி (10), பேரன் ஹரி கைலாஷ் (7) மற்றும் வேலுச்சாமியின் நண்பரான சோலைசேரி முனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியனின் மகனும் ராணுவ வீரருமான வசந்த் (23), மற்றொரு நண்பரான சிவகிரி மருதன்கோவில் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (40) ஆகியோரும் பயணித்தனர்.

காரை வேலுச்சாமி ஓட்டினார். தென்காசி – மதுரை சாலையில் சிவகிரி சோதனை சாவடி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வேலுசாமியின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார், சாலையோர மரத்தின் மீது மோதி அருகிலுள்ள வயலுக்குள் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேலுச்சாமி, ஹரி கைலாஷ், கீர்த்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த முனியாண்டி, வசந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த சிவகிரி எஸ்ஐ சோலையப்பன் மற்றும் போலீசார் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாடசாமி ராஜா தலைமையிலான வீரர்கள் துணையுடன் 3 பேரின் உடல்களையும் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த முனியாண்டியை தென்காசி அரசு மருத்துவமனைக்கும், வசந்த்தை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். புளியங்குடி டிஎஸ்பி மதன், சொக்கம்பட்டி இன்ஸ்பெக்டர் (பொ) மது விக்ரம், சிவகிரி எஸ்ஐ சோலையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!