ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் மணிமா நாயக் (38). இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று அவரது காலில் கடித்துள்ளது. வலியால் எழுந்த அவர் பதற்றமடையாமல், பாத்திரங்களுக்கு இடையே ஓடிய அந்தப் பாம்பைத் தேடிப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் பிஸ்கட் டப்பாவிற்குள் போட்டு அடைத்துள்ளார்.
பின்னர் தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற மணிமா, தன்னை கடித்த பாம்பையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார். டப்பாவிற்குள் இருந்த பாம்பைக் கண்டு மருத்துவமனை ஊழியர்கள் முதலில் அதிர்ச்சியடைந்தாலும், பாம்பின் வகையைக் கண்டறிந்து சரியான விஷமுறிவு மருந்தை வழங்க அது மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. சரியான நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண்ணின் துணிச்சலை மருத்துவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
