திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையத்தை சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி யமுனா தேவி (48). கடந்த 25-ஆம் தேதி தனது வீட்டின் அருகிலிருந்த பப்பாளி மரத்தில் காய் பறிப்பதற்காக சுவற்றில் ஏணியை சாய்த்து வைத்து ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஏணியில் இருந்து கீழே விழுந்ததில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உடனடியாக முத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக யமுனா தேவி அவசர அவசரமாக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்குள்ள அவசர விபத்து பிரிவு மற்றும் நரம்பியல் துறை மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். காயம் மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. மருத்துவர்கள் குழு தொடர்ந்து போராடியும், சிகிச்சை பலன் அளிக்காமல் யமுனா தேவி பரிதாபமாக உயிரிழந்தார். சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தலைமையிலான போலீஸார் முத்தூர் தொட்டியபாளையத்தில் உள்ள யமுனா தேவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
