தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் சாயப்பட்டறைகள் செயல்படாததால், விசைத்தறி தொழிலுக்கு தேவையான நூல் கிடைக்காமல் விசைத்தறி கூடங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சிலநாட்களுக்கு முன் சுற்றுசூழல் துறை அமைச்சரின் ஆய்வை தொடர்ந்து, உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்த சில சாய பட்டறைகள் மூடப்பட்டன. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மேற்கொண்ட நேரடி ஆய்வுக்குப் பிறகு, உரிய அரசு அனுமதி (CTE/CTO) இன்றி கழிவுநீரை வடிக்கால்களில் கலந்து வந்த 22 ஆலைகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு பிரச்சனை காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சங்கரன்கோவில், டி.என்.புதுக்குடி, புளியங்குடி மற்றும் சிந்தாமணி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், 10,000-க்கும் அதிகமான நெசவுத் தொழிலாளர்களும் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை அடுத்து சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையத்தை அரசு அமைத்து தர வேண்டும் என விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி கூடங்களின் உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
