கரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள குமரன் நகர் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப், பேப்பர் கப் உள்ளிட்ட பொருட்கள் குடோனில் வைத்து கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவை அனைத்தும் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டன.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ததற்காக கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
