செஞ்சி – விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். பின்னர், சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியதாக தெரிகிறது. அதனை சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை மீட்ட ஆசிரியர்கள், செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர் வழங்கிய பிறந்தநாள் சாக்லேட்டைச் சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் கொடுத்த சாக்லேட்டுகளை வகுப்பில் இருந்த சக மாணவர்கள் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். சாக்லேட்டைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, அடுத்தடுத்து 18 மாணவர்களுக்குத் திடீரென கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையில் பெரும் பதற்றமான சூழல் உருவானது.
மாணவர்களின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாகச் செயல்பட்டு சாக்லேட் சாப்பிட்டுப் பாதிக்கப்பட்ட 18 மாணவர்களையும் மீட்டனர். அவசர அவசரமாக அவர்கள் அனைவரும் செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளி நிர்வாகமும், உள்ளூர் அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
