கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாயமான போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் விஜயகுமார், கல்வராயன் மலையில் உள்ள 30 அடி ஆழப் பள்ளத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கரியாலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போயுள்ளார். இவரை அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், தற்போது கல்வராயன் மலைப் பகுதியில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள சிறுகள்ளூர் நீர்வீழ்ச்சிக்கு விஜயகுமார் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அங்குள்ள ஒரு 30 அடி ஆழப் பள்ளத்தில் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த கரியாலூர் போலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது காணாமல் போன விஜயகுமார் என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் சிறுகள்ளூர் நீர்வீழ்ச்சிக்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி பள்ளத்தில் விழுந்து இறந்தாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா என்ற பல கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.
