அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுப்பதற்கான அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தொடங்கி வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தெரிவித்ததாவது :
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். அரசு திட்டங்கள் பொதுமக்களைச் முறையாக சென்றடையவும், எதிர்கால தேவைகளை மதிப்பீடு செய்து புதிய திட்டங்களை உருவாக்கவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாக விளங்குகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் புகைப்படம் (Selfie Point) எடுக்கும் அமைப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இணையதளத்தின் மூலம் முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self enumeration) 31.07.2026 வரை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் சுய கணக்கெடுப்பினை தாங்களாகவே இணையதளம் https://se.census.gov.in வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் பணியான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு வருகிற 01.08.2026 முதல் 30.08.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் https://se.census.gov.in என்ற இணையதளம் வாயிலாக சுயக்கணக்கெடுப்பில் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 வகையான கேள்விகளுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குவதுடன், மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, அரியலூர் வட்டாட்சியர் தேவகி, தனி வட்டாட்சியர் (தேர்தல் பிரிவு) கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
