பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் வணிக வளாகத்தை 3 நாட்களில் கடைகளை காலி செய்ய மாநகராட்சி உத்தரவு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கிய வியாபாரிகள்.
கரூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சிக்கு சொந்தமான பழமையான முத்துக்குமாரசாமி காய்கறி சந்தை கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்துவதற்கு கட்டிடம் முற்றிலும் பாதுகாப்பற்றது

எனக்கூறி கடந்த ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் கட்டிடத்தை இடித்து அகற்ற அனுமதி வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சந்தையில் செயல்பட்டு வரும் 72 தரைக்கடைகள், 7 இறைச்சி கடைகள் மற்றும் பேருந்து நிலைய வடக்குப் பகுதியில் உள்ள 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு, மூன்று நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடைகளை காலி செய்யாவிட்டால், பொருட்களுக்கு ஏற்படும்

சேதத்திற்கு மாநகராட்சி பொறுப்பேற்காது என்றும், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று 70-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கவிதா மற்றும் ஆணையர் பிரித்விராஜை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்றும், புதிய சந்தைக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் மீண்டும் கடைகள் ஒதுக்கப்படும் என்ற எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெற இருந்த நேரத்தில் ஏராளமான வியாபாரிகள் திரண்டதால், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
