Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

தமிழக – கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, தென்காசி மாவட்டத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறி வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தென்காசி மாவட்டம் வழியாக கேரளாவுக்குக் கனிமவளங்கள் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகளால் புளியரை எல்லைச் சோதனைச் சாவடிப் பகுதியில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் அவசர சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்துச் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பொதுமக்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் இயக்கத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கனிமவள லாரிகளை இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், உரிய சட்ட நடவடிக்கைகளும் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!