தஞ்சாவூரில் புகார் கொடுத்த நபரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
தஞ்சாவூர் வல்லம் நம்பர் 1 சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கட்டடம் முறையாக கட்டப்படவில்லை என்றும், மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் மாவட்ட ஆட்சியர், மருத்துவத் துறை அலுவலர்கள் உள்பட பலருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி. திருமாறன் புகார் செய்தார்.
இது தொடர்பாக தன்னை தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஆர்.எம். பாஸ்கரன் (65) ஜாதி பெயரைக் கூறி திட்டியதாக மத்திய மண்டல காவல் தலைவருக்கு புகார் மனு அனுப்பினார். மத்திய மண்டல காவல் தலைவர் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாஸ்கரனை நேற்று கைது செய்தனர். இவர் அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.
வயது மூப்பு காரணமாகவும், பல்வேறு நோய்களுக்கு ஆள்பட்டதாலும் மருத்துவ அலுவலர்களின் ஆலோசனையின் பேரில், பாஸ்கரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
