இடுக்கு பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் ஆந்திர பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்குப் பிள்ளையார் கோயிலில் சிக்கி, ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் என்ற பக்தர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நேற்று அதே இடத்தில் சிக்கிய ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் உள்ளே நுழைய அனுமதி இல்லை என கட்டுபாடு விதிக்கும் வகையில் போர்டு வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உப கோவிலான இடுக்கு பிள்ளையார் கோவிலில் உடல் பருமனாக உள்ளவர்கள், வயதானவர்கள், உடல்நலக் குறைவாக உள்ளவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
