Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தை அடுத்த ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35). இவர் வீட்டில் அருகில் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார். அந்த கடையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக தென் தாமரை குளம் போலீசார் இவரை கைது செய்து, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

விசாரணை கைதியாக சிறையில் இருந்த சபரி வர்மன் ஜூலை 13 அன்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். பின்னர் இவர் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த நாகர்கோவில் சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், சிறை காவலர் சிவக்குமார் மற்றும் பல்வேறு வழக்குகளில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 11 பேரை நேசமணி நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சிறை காவலர்கள் நாங்குநேரி கிளைச் சிறையிலும், 8 கைதிகள் பாளையங்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணையை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான போலீசார், சபரி வர்மன் கொலை செய்யப்பட்ட நாகர்கோவில் சிறை, அவரின் குடும்பத்தினரிடம் முதற்கட்ட விசாரணையை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறை காவலர்கள் மற்றும் கைதிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில், “கொலை நடைபெற்ற அன்று இரவு, சபரி வர்மன் தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க செல்ல வேண்டும் என சத்தமாக கூச்சலிட்டு வந்துள்ளார். இதுகுறித்து சிறை வார்டனிடம் மற்ற கைதிகள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில் சபரி வர்மனை தாக்கியதாக கூறப்படும் 8 கைதிகளும் தங்களுக்கு வழங்கப்பட்ட சமையல் வேலையை முடித்துவிட்டு சிறை அறைக்கு வந்துள்ளனர்.

சபரி வர்மனின் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த வார்டன்கள், அந்த கைதிகளிடம் சபரி வர்மனை தாக்க கூறியுள்ளனர். வார்டன்கள் தூண்டுதலின் பெயரில் சபரி வர்மனை கைதிகள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் சபரி வர்மனின் லுங்கியை அவிழ்த்து இரு கைகள் மற்றும் கால்களை கட்டி வைத்து தாக்கியுள்ளனர். அப்போது சபரி வர்மன் கையில் கட்டிருந்த லுங்கியை அவிழ்க்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் லுங்கியை கிழித்து அவரின் கைகளை கட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் நிலைதடுமாறி சபரி வர்மன் உயிரிழந்துள்ளார்” என்பது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படும் 11 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!