கரூரில் கர்ப்பமான செல்ல நாய்க்கு வளைகாப்பு – குடும்பத்தினரின் பாசம்.
கரூர் மாவட்டம், சோமூர் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் ‘சாரா’ என்ற சிட்சு (Shih Tzu) இனத்தைச் சேர்ந்த செல்ல நாயை வளர்த்து வருகின்றனர்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாராவை தங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதி பாசத்துடன்

பராமரித்து வருகின்றனர். தற்போது கர்ப்பமாக உள்ள சாராவிற்கு வரும் 15 முதல் 20-ஆம் தேதிக்குள் குட்டிகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி கோமதி மற்றும் அவரது குடும்பத்தினர், பெண்களுக்கு நடத்தப்படும் வளைகாப்பு சடங்கைப் போன்று, செல்ல நாய் சாராவிற்கும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்காக தட்டுகளில் மிக்சர், பிஸ்கட், பழங்கள், பூக்கள் மற்றும் நாய்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் சீர்வரிசையாக அலங்கரித்து கொண்டு வரப்பட்டு, சாராவிற்கு வளைகாப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோமதியின் உறவினர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சாராவை வாழ்த்தினர். பின்னர் அனைவருக்கும் விருந்தும் வழங்கப்பட்டது.
செல்லப் பிராணியின் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில், கர்ப்பமான வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய இந்த நிகழ்வு ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
