தமிழகத்தின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான கச்சத்தீவு மற்றும் பாக்கு நீரிணைப் பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர். இருப்பினும், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடிப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை முகாமிற்கு விசாரணைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
