திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு – போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம், வாளசிராமணி மற்றும்

ஜடமங்கலம், ஜம்புமடை ஆகிய கிராமங்களில், தனியார் நிறுவனம் ஒன்று கோழிப்பண்ணை அமைத்து செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி இப்பகுதியில் மேலும் புதிதாக கோழிப்

பண்ணைகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால் இப்பகுதி நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் துர்நாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்பிரச்சினை தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், முசிறி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 1-ந் தேதி 3 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து துறையூர் – நாமக்கல் செல்லும் சாலையில் ஜம்புமடை கைகாட்டி என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் கோழிப்பண்ணை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அதற்கான எந்த பணியும் நடைபெறாததால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் இன்று மீண்டும் ஜம்புமடை கைகாட்டி என்ற இடத்தில் மீண்டும் 2-வது முறையாக சாலையில் அமர்ந்து கோழிபண்ணை தடை செய்யவும், கோழிப்பண்ணைகளை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக துறையூர் – நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தகவல் அறிந்த முசிறி தாசில்தார் வீரப்பன், டிஎஸ்பி முத்துக்குமார், தாத்தையங்கார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர்.
