Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

வீராணம் ஏரி கரையோரம் உடலை புதைக்கும் அவலம்-மக்கள் வேதனை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெய்யலூர் கிராமத்தில், பல தலைமுறைகளாக மயான வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீராணம் ஏரி சாலையோரத்தில் புதைத்து வரும் அவல நிலை நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெய்யலூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்களுக்கு இதுவரை அரசின் சார்பில் நிரந்தர சுடுகாடு அல்லது மயானம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களின் உடலை எடுத்துச் சென்று வீராணம் ஏரியை ஒட்டியுள்ள சாலையோர பகுதியில் புதைக்கும் நிலை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

மழைக்காலங்களில் அந்த இடம் சேறும் சகதியுமாக மாறுவதால் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கே கடும் சிரமம் ஏற்படுவதாகவும், சாலையோரத்தில் உடல்களை புதைப்பது மனிதநேயத்திற்கும், மரியாதைக்கும் புறம்பான நிலையாக இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், சாலையோரத்தில் புதைக்கப்படும் உடல்கள் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் அசௌகரியம் ஏற்படுவதாகவும், எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அந்த இடமும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமசாமி கூறுகையில்: எங்கள் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். பல தலைமுறைகளாக எங்களுக்கு தனியாக மயானம் இல்லை.

யாராவது இறந்தால், வேறு வழியில்லாமல் வீராணம் ஏரி சாலையோரத்தில் உடலை புதைத்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறந்தவர்களுக்குக்கூட மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய முடியாத நிலை உள்ளது.

எங்கள் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, அரசு உடனடியாக நிலம் ஒதுக்கி நிரந்தர மயானம் அமைத்து தர வேண்டும், என்றார்.எனவே, வெய்யலூர் கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையை பரிசீலித்து, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறைகளும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நிரந்தர மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!