திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், அதிநவீன ‘மெட்டா ரே-பேன்’ ஸ்மார்ட் கண்ணாடி (Meta Ray-Ban Smart Glass) மூலம் கருவறையைப் படம் பிடிக்க முயன்ற ஐதராபாத்தைச் சேர்ந்த பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகிய இரு இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய அமைச்சர் ஒருவர் கோயிலுக்கு வருகை தர இருந்த சூழலில் இச்சம்பவம் நடைபெற்றதால், பாதுகாப்புப் படையினர் இருவரிடமும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஐதராபாத்தைச் சேர்ந்த பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகிய இரு இளைஞர்கள் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது பவுனிஷ் அணிந்திருந்தக் கண்ணாடியில் இருந்து திடீரெனச் சிறிய வெளிச்சம் (LED Light) மின்னியுள்ளது. இதனைக் கவனித்தக் கோயில் பாதுகாப்பு ஊழியர்கள், சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரை நிறுத்திச் சோதனையிட்டனர். விசாரணையில், அவர் அணிந்திருந்தது கேமரா மற்றும் ரெக்கார்டர் வசதி கொண்ட ‘மெட்டா ரே-பேன்’ ஸ்மார்ட் கண்ணாடி என்பதும், அதன் மூலம் கருவறையைப் படம் பிடிக்க முயன்றதும் தெரியவந்தது. உடனடியாக அக்கண்ணாடியைப் பறிமுதல் செய்த ஊழியர்கள், இரு இளைஞர்களையும் கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டுப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்ததால், இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
