தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் மேலடுக்கு சுழற்சிகள் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பரவலான மழைப்பொழிவுக்குக் காரணமாக அமைகின்றன. கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் பருவமழைப் பொழிவு சற்று தணிந்திருந்த சூழலில், வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி தற்போது தீவிரமடைந்து புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் உருவான இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய சாதகமானச் சூழல் உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஏனையத் தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
