நாட்டில் உள்ள 14 மாநிலங்களின் முதல்வர்களுக்கு எதிரான தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பதவியில் இருக்கும் முதல்வர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த அறிக்கையை மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிராக 4,192 குற்றவியல் வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் 519 வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 14 முதல்வர்களுக்கு எதிராக தீவிர குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முதலிடத்தில் உள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேற்கு வங்க முதல்வர் சுவேந்தி அதிகாரி 29, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் 19, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 19, கேரள முதல்வர் வி.டி. சதீசன் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 5, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் 5, ஹிமாசல் முதல்வர் சுக்வீந்தர் சிங் 4, பிகார் முதல்வர் சாம்ராத் சௌத்ரி 2, சிக்கிம் முதல்வர் தமாங் 1, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 1, ஒடிஸா முதல்வர் மோகன் சரண் மாஜி 1 மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா 1 ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 170 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தெலங்கானாவில் 17 உறுப்பினர்களில் 11 பேர் மீதும், கேரளத்தில் 21 உறுப்பினர்களில் 11 பேர் மீதும், பிகாரில் 40 உறுப்பினர்களில் 19 பேர் மீதும், உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களில் 34 பேர் மீதும் தீவிரமான குற்றவியல் வழக்குகள் உள்ளன.
இதேபோல், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களில் 75 பேர் (33%) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள் (18%) கடுமையான குற்றவியல் வழக்குகள் (ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடியவை). மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் 58% பேருக்கு எதிராகவும், கேரளத்தில் 57%, ஆந்திரத்தில் 56%, தெலங்கானா 49% உறுப்பினர்ளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பதவியில் உள்ளவர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மீதான வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காகச் சிறப்பு நீதிமன்றங்களை நியமிக்குமாறும், இவ்வழக்குகளின் விசாரணை முன்னேற்றத்தை அந்தந்த உயர் நீதிமன்றங்கள் தீவிரமாகக் கண்காணிக்குமாறு உத்தரவிடுமாறும் உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
