Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்-ஸ்டிக்கர்’ கூட பிரிக்காத செருப்புகளால் சந்தேகம்

3 தமிழர்கள் சுட்டுக்கொலை வழக்கில் திருப்பம்

கர்நாடக காட்டில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவ இடத்தில் புதிய செருப்புகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவிற்குட்பட்ட ஷாக்யா கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 15ம் தேதி அதிகாலை கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இவர்கள் வேட்டைக்காரர்கள்; வனத்துறையினரை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் பதிலுக்கு சுட்டதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயிரிழந்த தமிழர்கள் காட்டில் காணாமல் போன தங்களது கால்நடைகளைத் தேடவே சென்றனர் என்றும்,

அவர்களை வனத்துறை திட்டமிட்டு சுட்டுக்கொன்று பொய் வழக்கு போட்டுள்ளது என்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 2 நாட்டுத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், டார்ச் லைட்டுகள், வேட்டை உபகரணங்கள் மற்றும் 20 முதல் 30 கிலோ வரையிலான வனவிலங்கு இறைச்சி ஆகியவற்றுடன் ‘பாரகன்’ பிராண்ட் புதிய செருப்பு ஜோடி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. கடந்த 15ம் தேதி மதியம் 12.29 மணிக்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அந்தப் புதிய செருப்பில் ஒட்டப்பட்டிருந்த விலைக் குறியீட்டு ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாமல் அப்படியே இருப்பது தெரியவந்துள்ளது.

அடர்ந்த காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றவர்கள் எப்படி ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புத்தம் புதிய செருப்பை அணிந்து சென்றிருக்க முடியும் என்றும், அதில் எந்தவித மண் அல்லது ரத்தக் கறையோ இல்லாமல் புதிதாக எப்படி இருக்க முடியும் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வனத்துறையினர் இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக போலி ஆதாரங்களை உருவாக்கி, சம்பவ இடத்தில் புதிய செருப்புகளைக் கொண்டு வந்து வைத்துள்ளதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட 2 நாட்டுத் துப்பாக்கிகள், 20 முதல் 30 கிலோ இறைச்சி, 2 லிட்டர் கூல்டிரிங்க்ஸ் பாட்டிலில் இருந்த 250 மில்லி தண்ணீர் மற்றும் அந்தப் புதிய செருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விசாரணை அதிகாரியான சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் தினேஷ் குமார் மீனா முன்னிலையில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், ‘எங்களது உறவினர்கள் வேட்டைக்காரர்கள் அல்ல. வனத்துறையினர் தாங்கள் செய்த குற்றத்தை மறைக்கவே இதுபோன்ற போலி ஆதாரங்களைச் சேர்த்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கூறினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!