கர்நாடகாவில் திருமணம் முடிந்த சில மணிநேரங்களிலேயே 21 வயது புது மணப்பெண் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்தவர் சுமலதா. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் கஜேந்திரா என்பவரை காதலித்துள்ளார். கஜேந்திரா சுமலதாவின் உறவினர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று வீட்டிலிருந்து காணாமல்போன சுமலதா, தனது உறவினர்களான போரேஷ் மற்றும் அசோக் ஆகியோருடன், சல்லகெரே-நாயக்கனஹட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் என். மகாதேவபுராவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஆட்டுக்கொட்டகைக்குச் சென்றதாகவும், அங்கு அவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மதியம், போரேஷ் மற்றும் அசோக் ஆகியோர் ராமசாகரா அருகே உள்ள ஈஸ்வரநதிஹிப்பே கோவிலில் கஜேந்திரா மற்றும் சுமலதாவிற்கு திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமண விழாவின் புகைப்படங்கள் சுமலதாவின் பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் அதே ஆட்டுக்கொட்டகைக்குத் திரும்பினர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று சுமலதா சிறுநீர் கழிக்க வெளியே சென்றதாகவும், ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. கஜேந்திராவும் அவரது நண்பர்களும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், சுமலதாவின் பெற்றோர் சனிக்கிழமையன்று தலக்கு காவல் நிலையத்தில் சுமலதா காணாமல் போனதாகப் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஞாயிற்றுக்கிழமை மாலை, என். மகாதேவபுரா கிராமத்தில் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு அருகில் யாரும் பயன்படுத்தாத கிணற்றில் சுமலதாவின் உடலை கண்டெடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். இந்த வழக்கு மொளகால்முரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
