Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்.. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்..

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை நாள்தோறும் இயக்கி வருகிறது. பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக அரசுக்கு புகார் வந்துள்ளது. குறிப்பாக, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகிறது. மேலும் பஸ்ஸில் ஏற வரும் பயணிகளிடம் முறையற்ற வகையில் டிரைவர்கள், கண்டக்டர்கள் நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இனி இப்படி நடந்து கொண்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் மாநகர பேருந்துகள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை என்பது மக்களின் மனக்குறையாக உள்ளது. அதேநேரம் வந்தால் மொத்தமாக பேருந்துகள் வருவதாகவும், அப்படி வரும் பேருந்துகளில் ஏறும் பயணிகளை சில நடத்துனர்கள், டிரைவர்கள் பேசும் விதம் தவறாக உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது.

இதுபற்றி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “சென்னை மாநகர போக்குவரத்து கழகமானது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை நாள்தோறும் இயக்கி வருகிறது. பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக அரசுக்கு புகார் வந்துள்ளது.

குறிப்பாக, பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாகவும், 2 அல்லது 3 பஸ்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் எந்த பஸ்சும் நிற்காமல் செல்வதாகவும், பஸ்சை பிடிப்பதற்காக ஓடிவரும் பயணிகளிடம் டிரைவர்கள், கண்டக்டர்கள் முறையற்ற வகையில் பேசுதல், அடுத்த பஸ்சில் பயணம் செய்யுமாறு கூறுதல் போன்ற செயல்கள் நடைபெறுவதாகவும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.

பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகரமான சேவையை வழங்குவது முதன்மையான கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, சாதாரண கட்டண பஸ்கள் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் தவறாமல் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். 2 அல்லது அதற்கு மேற்பட்ட பஸ்கள் ஒரே நேரத்தில் ஒரு நிறுத்தத்திற்கு வந்தாலும், டிரைவர் பஸ்சை பாதுகாப்பான இடைவெளியில் நிறுத்தி பயணிகளை ஏறி, இறங்கி செல்ல அனுமதிக்க வேண்டும். பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், மாணவ, மாணவிகள் பஸ்சில் பாதுகாப்பாக ஏறி, இறங்க தேவையான உதவிகளை வழங்க வேண்டும். பயணிகளிடம் கடுமையாக பேசுதல், அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

பயணிகளை ஏற்ற மறுத்தல் மற்றும் முறையற்ற வகையில் நடந்துகொள்ளுதல் ஆகியவை கடுமையான ஒழுங்கீனச் செயலாக கருதப்பட்டு புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தங்களது பணிமனை சார்ந்த டிரைவர், கண்டக்டர்கள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்த வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!