கரூர் அருகே குப்பம் கிராமத்தில் கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு.
கரூர் மாவட்டம், புகலூர் வட்டம் குப்பம் கிராமத்தில், லட்சுமி நிறுவனத்தின் சார்பில் புதிதாக கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கல் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக அழைத்து வரப்பட்ட சிலர், குவாரி அமைக்கப்படுவதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், எனவே குவாரி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கல் குவாரிகள் உரிய அனுமதியின்றி செயல்படுவதாகவும், விதிமீறல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், தற்போது அமைக்கப்பட உள்ள கல் குவாரியும் பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அமைய உள்ளதால், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படும் எனக் கூறி, குவாரி அமைக்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
