தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள அறைகளைப் பாதுகாப்பற்ற நிலையிலிருந்து சீரமைக்க முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டடங்கள் பராமரிப்பின்றிப் பழுதாகிக் காணப்படுகின்றன. பயன்பாட்டில் உள்ள பல அறைகளின் சுவர்களில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கட்டிடங்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான முறையில் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன. கழிப்பறைகளின் கதவுகள் உடைந்து சேதமடைந்தும், அடிப்படை சுகாதாரம் மற்றும் பராமரிப்பு குறைபாடுகளுடனும் காணப்படுகின்றன.
தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் பாதுகாப்பை உறுதி செய்யக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து பழைய மற்றும் பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களையும் துறைசார் நிபுணர்களைக் கொண்டு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
சுவர்களில் உள்ள விரிசல்கள் மற்றும் சேதமடைந்த கட்டிடப் பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
உடைந்துபோன கழிப்பறை கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் புதியதாக மாற்றி அமைக்க வேண்டும்.
கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புத் தன்மை குறித்து துறைசார் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிட வேண்டும்.
நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் உயிரப் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
