தூத்துக்குடியில் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மூக்காண்டி (65). இவர் அப்பகுதியில் ‘வசந்தி ஸ்டோர்’ என்ற பெயரில் மளிகை மற்றும் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 11.00 மணி அளவில் கடையைப் பூட்டிவிட்டு மூக்காண்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
நேற்று காலை 09.00 மணி அளவில் கடையைத் திறக்க வந்தபோது, கடையில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். மர்ம நபர்கள் கடையின் மேலிருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்தும், பூட்டை அறுத்தும் உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சிசிடிவி கேமரா வயர்களையும் துண்டித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் கடையில் இருந்து செல்போன், ரொக்கப் பணம் ரூ.20,000, பீடி மற்றும் சிகரெட் 20 பாக்கெட்டுகளை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் மூக்காண்டி அளித்த தகவலின் பேரில், முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தடயங்களைச் சேகரித்துத் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
