திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்திற்கு உட்பட்டு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வயலூர் சாலையில் கடைகளின் முன்பு இருந்த விளம்பர பதாகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதாக கூறப்படுகிறது இந்த விளம்பர பதாகையை அகற்றியதை கண்டித்தும், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வலியுறுத்தியும், திருச்சி வயலூர் ரோடு , புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பொருளாளர் ஆனந்த் முன்னிலையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் இன்று காலையில் வயலூர் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்சி மாநகராட்சி மண்டலம் – 5ன் மண்டல குழு உதவி ஆணையர் வீர முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் வியாபாரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டம் நடத்த நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் திரண்டதால் வயலூர் சாலையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
