தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதியின் மகனான செல்வமுருகன், ‘தூத்துக்குடி செல்வம்’, ‘துப்பாக்கி செல்வம்’ என அழைக்கப்பட்டார். தனது 19வது வயதில் தந்தை ராமகிருஷ்ணனை அரிவாளால் வெட்டிய நாராயணமூர்த்தியை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்றார்.
தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 27க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.கடந்த 2024-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடந்த பணம் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட செல்வமுருகன், சுசீந்திரம் அருகே தேரூரில் பதுங்கியிருந்தபோது போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் அவரது காலில் சுட்டு கைது செய்தனர். இந்நிலையில், தற்போது கூடங்குளம் அருகே அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கூடங்குளம் காவல் நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ., தொலைவில் உள்ள தோட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து காலையில் தான் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.
