கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற கஞ்சா போதை ஆசாமியிடம் இருந்து, அங்கு இருந்த வளர்ப்பு நாய்கள் சண்டையிட்டுக் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான மற்றும் அதிர்ச்சிகரமான சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, துடியலூர் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி, அசோகபுரம் பகுதியில் நேற்றைய தினம் பெட்டிக்கடை ஒன்றுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டதாகத் துடியலூர் காவல் நிலையத்தில்

புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றிக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, பெட்டிக்கடை தீ வைப்பு சம்பவத்தையும் தாண்டி அதிர்ச்சி அளிக்கும் வேறொரு கொடூரச் சம்பவம் கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
இன்று அதிகாலை 2 மணி அளவில், அசோகபுரம் ரயில்வே மேம்பாலச் சாலையோரமாக அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அமர்ந்து இருந்தார். அப்போது, கஞ்சா மற்றும் மது போதையில் அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவரை அங்கு இருந்த 2 நாய்கள் இடை விடாது குரைத்துத் தொடர்ந்து சென்று உள்ளன.
அப்போது அந்த பெண்ணிடம் அந்த இளைஞர், “இது உங்க நாயா பாரு… பின்னாடியே வந்துட்டு இருக்கு!” எனக் கேட்டு உள்ளார். அதற்கு அந்தப் பெண், “கல்லை எடுத்து அடிங்க… நாய் ஓடிவிடும், இதுகூட தெரியாதா?” எனக் கூறி உள்ளார்.
இளைஞரும் கல்லை எடுத்து எறியவே நாய்கள் சில அடி தூரம் சென்று மீண்டும் அவரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே நின்றன.
அந்தச் சமயத்தில், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த இளைஞர், சாலையோரம் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திடீரென மானபங்கம் செய்ய முயன்று உள்ளார்.
ஆபத்தை உணர்ந்த அப்பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே, உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட நாய்கள் பாய்ந்து வந்து அந்த இளைஞரைத் தாக்கத் தொடங்கின. குரைத்துக் கொண்டே இளைஞரின் கால்களைக் கடித்து இழுத்துப் பெண்ணை நெருங்கவிடாமல் தடுத்தன.
நாய்களின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்த அந்த இளைஞர், பெண்ணை விட்டு விட்டு அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார்.
விடாத நாய்களும் அந்த இளைஞரைப் பின் தொடர்ந்து துரத்திச் சென்றன.
மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞரிடம் இருந்து நன்றியுள்ள நாய்கள் கடித்துப் பெண்ணைக் காப்பாற்றிய இந்த நெகிழ்ச்சி காட்சி சி.சி.டி.வி யில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கிய துடியலூர் காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த பூபதி என்ற இளைஞரை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை ஆசாமி இடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நாய்கள் போராடிக் காப்பாற்றிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
