லாரி உரிமையாளரின் செல்போன் பறிப்பு- சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் கோரிமேடு உப்புக்கார தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்த இவர் வேலையில் இருந்த போது அவரது மாமா இறந்துவிட்டதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. இதை எடுத்து அவர் பஸ்ஸில் திருச்சிக்கு வந்து மரக்கடை பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது சதீஷ்குமார் செல்போனில் பேசி கொண்டிருந்தபோது, மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து அவரது செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை கூனி பஜார் பகுதியை சேர்ந்த சிமோன் கிஷோர் ( 25) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்பாக பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக சர்க்கரை என்கிற சதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
மருத்துவமனை சென்று திரும்பிய முதியவர் தற்கொலை
திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது 77. இவருக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டதால்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவர் 3 -ந்தேதி மருத்துவமனைக்கு சென்று விட்டு வீடு திரும்பி உள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் வயது 27. இவர் கடந்த மாதம் 28ஆம் தேதி உறையூர் கோணக்கரைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து வெங்கடேஸ்வரன் உரையூர் போலீஸ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் வீராசாமி வயது 77. இவர் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
