கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள சாத்தமங்கலத்தைச் சேர்ந்த வினீஷ் – அஞ்சு தம்பதி. இவர்களுக்கு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடந்தாண்டு ஜூலையில் பெண் குழந்தை பிறந்தது.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில மாதங்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீடு திரும்பியது முதல்,
குழந்தை அழுதபடியே இருந்தது. அதன் வலது விலா எலும்பு பகுதிக்கு அருகே வீக்கம் இருப்பதை கவனித்த பெற்றோர், அதை டாக்டர்களிடம் காண்பித்தனர்.
‘அது சாதாரண வீக்கம்; விரைவில் குணமாகிவிடும். சில அசவுகரியங்கள் காரணமாக குழந்தைகள் அழுவது இயல்பு. ‘உடலில் உள்ள வீக்கத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்’ என, டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து, வினீஷ் – அஞ்சு தம்பதி சமாதானம் அடைந்தனர். இருப்பினும், நாளாக நாளாக குழந்தையின் விலா எலும்பு பகுதியில் இருந்த வீக்கம் அதிகரித்தது. குழந்தையும் வலி தாளாமல் தொடர்ந்து அழுதது.
கடந்த ஜூலையில், குழந்தையை கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோர், டாக்டரிடம் காண்பித்தனர். ‘ஸ்கேன்’ பரிசோதனையில், விலா எலும்புக்கு அருகே ஊசி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை வாயிலாக, ஊசி அகற்றப்பட்டது.
இது குறித்து வினீஷ் – அஞ்சு தம்பதி கூறுகையில், ‘கோட்டயம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் குழந்தை பிறந்த இந்த ஓராண்டு காலத்தில், வேறு எங்கும் எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. இது முழுக்க முழுக்க டாக்டர்களின் அலட்சியத்தாலேயே நிகழ்ந்துள்ளது’ என, தெரிவித்தனர். புகாரைத் தொடர்ந்து, கோட்டயம் மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
