கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் டாஸ்மார்க் கடை பூட்டி உள்ளதால் மன மகிழ் மன்றத்தில் அதிக அளவு கூட்டம்
டாஸ்மார்க் ஊழியர்கள் திடீர் போராட்டம்: கும்பகோணத்தில் தனியார் மதுபானக் கடை முன் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்த மதுப்பிரியர்கள்! காலி மதுப் பாட்டில்களை அரசே நேரடியாகத் திரும்பப் பெற வேண்டும், கடை வாடகையை அரசே ஏற்க வேண்டும் மற்றும் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மதுப்பிரியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கருப்பூர் புறவழிச்சாலையில்

செயல்பட்டு வரும் ஒரு தனியார் மதுபானக் கடை முன், மது வாங்குவதற்காக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலையப் போலிசார், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தனியார் மதுபானக் கடையை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டனர். மேலும், சாலையில் திரண்டிருந்த மதுப்பிரியர்களை அங்கிருந்து கலைந்து போகுமாறு விரட்டியடித்தனர்.

அப்போது அங்கு வந்த மதுப்பிரியர் ஒருவர், “திடீரென கடைகளை மூடினால் தினமும் மது அருந்தும் நாங்கள் என்ன செய்வது? உடம்பு வலியால் அவதிப்படும் எங்களுக்கு மது வழியாவிட்டால் கை, கால் நடுக்கம் ஏற்படும்” என போலிசாரிடம் புலம்பிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பையும் வேடிக்கையையும் ஏற்படுத்தியது.
டாஸ்மார்க் ஊழியர்களின் போராட்டத்தால் மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது.
