தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கிடக் கோரி திருச்சியில் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு நீண்டகாலமாக உயர்த்தி வழங்கப்படாமல் உள்ள உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கிடக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் இன்று திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுத் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்து வருவது தமிழக அரசால் அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையாகும். தமிழ்நாட்டில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மற்றும் ரூ.2,000 என இரண்டு வகையாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், இது அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த உதவித்தொகையாகவே உள்ளது.இது குறித்துச் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “அண்டை மாநிலங்களான கேரளாவில் ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என மூன்று வகையாகவும், புதுச்சேரியில் ரூ.3,500, ரூ.4,500, ரூ.5,500 எனவும், தெலுங்கானாவில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ.4,016 எனவும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக உதவித்தொகை ஏதும் உயர்த்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது” எனச் சுட்டிக்காட்டினர்.
தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் சங்கம் சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்ததுடன், தற்போதைய விலைவாசி உயர்வை முன்னிறுத்தி உதவித்தொகையை உயர்த்தி வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினர்.
எனினும், இதுவரை உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
