வடசென்னைக்குட்பட்ட மணலி, மாதவரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ரவுடிகளுக்கு இடையே நிலவி வரும் முன்விரோதம் மற்றும் தொழில் ரீதியான மோதல்கள் காரணமாக அவ்வப்போது வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. காவல் துறை சார்பில் தீவிர ரோந்துப் பணிகள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும், ரவுடி கும்பல்களுக்கு இடையிலான எதிரெதிர் மோதல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சென்னை மணலி பகுதியில் ரவுடி ராகேஷ் தனது இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், திடீரென ராகேஷின் பைக்கை வழிமறித்து நிறுத்தினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களின் கைகளில் வைத்திருந்த கூர்மையான அரிவாள்களால் ரவுடி ராகேஷை அவர்கள் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். ராகேஷின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவருவதைப் பார்த்த தாக்குதல்தாரிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இரத்த வெள்ளத்தில் சரிந்த ராகேஷை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மணலி காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அந்த 2 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
