முதலமைச்சர் காவல்துறை மானியத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், காவல்துறைக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்து உள்ளார்.
பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரவை விதிகளின்படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவையில் பேசவே கூடாது. ஆனால் முதல்வர் விஜய் அது குறித்து நேற்று பேசியிருந்தார். முதல்வர் விஜய் நேற்று பேரவையில் பழைய வரலாறு மற்றும் கடந்த காலப் பிரச்சினைகளை பற்றி பேசி சட்டமன்ற நேரத்தை வீணடித்தார் என்றும் விமர்சித்து உள்ளார். சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா கைதெல்லாம் ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரிந்த மிக பழைய வரலாறு. அதையே மீண்டும் மீண்டும் பேசி காலத்தைத்தான் வீணடிக்கிறார்கள். இப்படி பழைய விஷயங்களை பற்றி பேசி கால விரயம் தான் செய்கிறாரே ஒழிய, ஆக்கபூர்வமான விஷயங்களை பற்றி பேசுவதில்லை. அந்த வகையில் பார்த்தால் மக்களுக்கு உபயோகமான விஷயங்கள் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் நடக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் தான் சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது அதனால் மக்கள் பிரச்சனை பேச வேண்டும்.
என்னை பொறுத்த வரை மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவே நான் ஆர்வமாக வந்தேன். ஆனால், பழையவற்றைப் பேசி மக்களுக்கு உபயோகமில்லாத ஒரு சட்டசபையாக இது நடந்திருக்கிறது, மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்ட முதலமைச்சர். அது கடைமடை சென்றதா என்று பார்வையிடவில்லை; இது ஒரு photo shoot ஆட்சியாக இருக்க கூடாது என்றும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்துள்ளன; தமிழகத்தில் சட்டம். ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்றும் விமர்சித்து உள்ளார்.
