ஐதராபாத்: தெலங்கானா சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.சி. தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி சபாநாயகர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை எனக் கூறி பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியினர் கறுப்பு உடை அணிந்து சட்டசபைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் உருவானது.
இதையடுத்து கே.டி.ராமராவ், ஹரிஷ் ராவ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதற்கிடையே அவைக்குள் பி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் தாடா மது, சபாநாயகர் கட்டம் பிரசாத் குமாரை ஒருமையில் பேசி அவதூறு பரப்பியதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த சபாநாயகர் பிரசாத் குமார், அவையிலேயே இருக்கையில் அமர்ந்தபடி கண்ணீர் வடித்து கதறி அழுதார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘இது தெலங்கானாவின் வரலாற்றில் மிக இருண்ட நாள்; 4 கோடி மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெரும் அவமானம்’ என்று ஆவேசமாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘சபாநாயகரின் குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசியிருப்பது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம்; அரசியலமைப்பு பதவியில் உள்ள தலித் தலைவரை அவமதித்ததை ஜனநாயக சமூகம் ஏற்காது’ என்று ஆவேசமாக பேசினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பி.ஆர்.எஸ். கட்சியின் தாடா மது திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனிடையே போராட்டம் குறித்து பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ராமராவ் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி 100 நாட்களில் நிறைவேற்றுவதாக பாண்ட் பேப்பரில் எழுதிக்கொடுத்த 420 வாக்குறுதிகளில், ஆட்சிக்கு வந்து 1,000 நாட்கள் ஆகியும் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டது’ என்று குற்றம் சாட்டினார். இந்த திடீர் தர்ணா போராட்டத்தால் சட்டசபை வளாகப் பகுதியில் சுமார் 40 நிமிடங்கள் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
