தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழி கிராம நிர்வாக அலுவலர் (VAO) தனசேகர்(45), விவசாயியிடம் நில அடங்கல் வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்
தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மதிபால் (56). இவர் காயாமொழி கிராமத்தில் உள்ள தனது 86 சென்ட் நிலத்தில் தென்னை மற்றும் எலுமிச்சை விவசாயம் செய்து வருகிறார். அரசு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு நில அடங்கல் சான்றில் கையெழுத்திட்டு வழங்குவதற்கு மதிபால்(56) என்பவரிடம் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் ரூ.2,500 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மதிபால், இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.2,500-ஐ மதிபாலிடம் வழங்கி, அதை தனசேகரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர் . அதன்படி நேற்று பகலில் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம் பணத்தை மதிபால் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியபோது, மதிபால் அளித்த புகாரின் பேரில் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரை கையும், களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
