பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில் சென்னைக்கான 2-வது சர்வதேச பசுமை விமான நிலையத்தை அமைக்கும் பணியில் மத்திய அரசுடன் இணைந்து திமுக அரசு ஈடுபட்டிருந்தது.
இந்த திட்டம் 5,800 ஏக்கரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தனியார் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து சுமார் 1,800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பரந்தூர் விமான நிலையத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், தவெக ஆட்சி வந்தவுடன் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
பரந்தூர் விமான நிலையத்துக்காக கைப்பற்றப்பட்ட இடத்தில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்த நிலையில், அந்த நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், பரந்தூர் அருகேவுள்ள மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கரில் ரூ. 175 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நிலத்தை கையகப்படுத்தும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த தொழிற்பூங்காவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
