இடைத்தேர்தலில் தனித்து போட்டி –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
தமிழ்நாட்டில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாநகர் குடமுருட்டி அருகிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடைபெற உள்ள மதுராந்தகம் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். வேட்பாளர் அறிமுகம் உள்ளிட்ட விஷயங்கள் மற்றும் வேட்பாளர் அறிமுகம் வரும் 15ஆம் தேதி சென்னையில் நடைபெறும். இந்த தேர்தலில் ஏற்கனவே அதிமுக – பாஜக அணி, திமுக அணி, தவெக அணி என மூன்று அணிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இடதுசாரிகள் எந்த அணியிலும் இல்லை. நடைபெற உள்ள இடை தேர்தல் என்பது ஒரு பொதுத் தேர்தலோ ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலோ இல்லை. ஆகவே இந்த இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது தொடரும். நாங்கள் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்ததால் ஆட்சிக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. மூன்று அணிக்கும் எதிராகத்தான் நாங்கள் வேட்பாளரை நிறுத்துகிறோம். இது திணிக்கப்பட்ட ஒரு இடைத்தேர்தல். ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும்.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பததற்காக முதல்வர் வெளிநாடு சென்று உள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே 100 நாள் ஆட்சியில் அதிக மூலதனத்தை கொண்டு வந்து சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் வெளிப்படத் தன்மை இல்லை. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். உள்நாட்டு தொழில்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. உள்ளூர் சிறுகுறு தொழில்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இடதுசாரி சக்திகளை வலுப்படுத்த வேண்டும், இடதுசாரி கருத்துகளை மக்கள் மத்தியில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும், ஒரு மாற்று கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நல்ல வாய்ப்பாக இந்த தேர்தல் அமையும். இதன் மூலமாக சட்டமன்றத்தையும் ஜனநாயக பூர்வமான மன்றமாக மாற்றுவதற்கு இடதுசாரிகளுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.
