Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடுத்தடுத்து பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்-கோவையில் சம்பவம்

அடுத்தடுத்து பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்-கோவையில் சம்பவம்

செல்வபுரம், சரவணம்பட்டியில் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனங்கள்: அதிகாரிகளின் ஆய்வுக்கு மக்கள் கோரிக்கை!

​ கோவை, செல்வபுரம் பகுதியில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் திடீரெனத் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கோவையில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் பற்றி எரிந்து வருவதால் பெட்ரோலில் எத்தனால் கலப்புதான் காரணமா என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து உள்ளனர்.

கோவை, செல்வபுரம் பிரியா நகர் பகுதியில் இன்று பெண் ஒருவர் தனது சுசுகி ஆக்ஸிஸ் 125 (Suzuki Access 125) இருசக்கர வாகனத்தில் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, வாகனத்தின் என்ஜின் பகுதியில் இருந்து திடீரெனப் புகை வெளியேறி உள்ளது.

​இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் உடனடியாக வாகனத்தை ஓரங்கட்டி விட்டு கீழே இறங்கினார். அடுத்த சில விநாடிகளில் இருசக்கர வாகனம் நடுரோட்டிலேயே கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் வாகனம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. நல்வாய்ப்பாகப் பெண் எவ்வித காயமுமின்றித் தப்பினார்.

இதற்கு முன்னதாக, நேற்றைய தினமும் கோவை சரவணம்பட்டி பகுதியில் புதிதாக வாங்கப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இவ்வாறு 48 மணி நேரத்திற்குள் கோவையில் அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்கள் நடுரோட்டில் பற்றி எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

​எத்தனால் கலப்பால் விபத்தா? – பொதுமக்கள் கேள்வி:

சமீப காலமாகப் பெட்ரோலில் எத்தனால் (Ethanol Blended Petrol) கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த எத்தனால் கலப்பு காரணமாகவே வாகனங்களின் என்ஜின் பகுதி அதிக வெப்பம் அடைந்து அல்லது ரப்பர் பைப் (Fuel Hose) சேதம் அடைந்து தீப்பிடிக்கிறதா ? என்ற வலுவான சந்தேகம் பொதுமக்கள் மற்றும் வாகன வல்லுநர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

​”புது மற்றும் நல்ல நிலையில் உள்ள வாகனங்கள் கூட இப்படி திடீரெனப் பற்றி எரிந்தால் எங்களின் உயிருக்கு யார் பொறுப்பு ? பெட்ரோல் தரக் கட்டுப்பாடு மற்றும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்துப் போக்குவரத்துத் துறை மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கொந்தளிப்புடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

error: Content is protected !!