Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவர் பாரதிதாசனுக்கு அரசு முழு உதவி-அமைச்சர் வன்னியரசு உறுதி

வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: அமைச்சர் வன்னியரசு உறுதி…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

திராவிட அரசியலின் அடித்தளம் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பிரிட்டிஷாரிடம் போராடி உரிமை பெற்றுத் தந்தவர். வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கருடன் பங்கேற்று ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக உரத்துக் குரல் கொடுத்தவர்.

புதர் மண்டிக் கிடந்த அவரது நினைவிடத்தை எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் மீட்டு ‘உரிமைக்களம்’ என நிலைநிறுத்தி நினைவு மண்டபமாக்கியுள்ளார். ஆண்டுதோறும் தலைவர் தலைமையில் அங்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் அஞ்சலி செலுத்தி வருகின்றன. திண்டிவனம் தொகுதியில் அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளோம். சாதி ஒழிப்பை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்படுவோம் என உறுதியேற்கிறோம்.

மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளும்

வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் விவகாரம் குறித்து துறை ரீதியாக நேற்று முழு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த தம்பியின் படிப்புக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி செய்யும். மூளை திசுக்கள் தொடர்பான பி.எச்.டி. ஆராய்ச்சியை தமிழ்நாட்டிலேயே அவர் மட்டுமே மேற்கொள்கிறார். அவர் படித்து முடித்து வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.6 லட்சம், வாழ்வாதாரத் தொகை (லிவிங் எக்ஸ்பென்ஸ்) ரூ.6 லட்சம் அனுப்பப்பட்டுவிட்டது. ஆராய்ச்சிப் பொருட்களுக்கான தொகை கேட்டுள்ளார். அதுவும் ஓரிரு நாட்களில் சென்று சேரும். இதில் அரசியல் செய்ய வேண்டாம். மெயிலுக்கு மெயிலில் பதில் அனுப்ப வேண்டும், வீடியோ பதில் ஏற்புடையதல்ல.

கடந்த தி.மு.க. ஆட்சியில் அயோத்திதாசர் வெளிநாட்டுக் கல்வி உதவித் திட்டத்தில் 609 பேர் விண்ணப்பித்ததில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டுமே ரூ.84.89 கோடி வழங்கப்பட்டது. நாங்கள் இந்த ஆண்டு 437 விண்ணப்பங்களில் 365 பேருக்கு ரூ.131 கோடி ஒதுக்கியுள்ளோம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு யு.ஜி. மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.4,750-லிருந்து ரூ.12,000 ஆகவும், பி.எச்.டி. மாணவர்களுக்கு ரூ.10,000 ஆகவும் உயர்த்தியுள்ளோம். இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கியுள்ளோம். விடுதி உதவித்தொகை ரூ.1,400-லிருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி உதவித்தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் வழிகாட்டுதலில் நிதியமைச்சரிடம் வாதாடி இதனைப் பெற்றுள்ளோம்.

601 பேர் தகுதி பெற்றிருந்தும் ஏன் 181 பேருக்கு மட்டும் கொடுத்தீர்கள்? மீதி மாணவர்களின் கல்வியை கடந்த அரசு தடுத்துள்ளது. நாங்கள் தகுதியான அனைவருக்கும் வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கிளையாக செயல்படுவதாகவும், முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சிப்பது முன்னாள் முதல்வருக்கு அழகல்ல என்றும், எங்கள் இலக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாதான் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

error: Content is protected !!